ரூத் Chapter 1அத்தியாயம் 1 1 நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவந்த நாட்களில், தேசத்தில் பஞ்சம் உண்டானது; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோடும், இரண்டு மகன்களோடும் மோவாப் தேசத்திற்குப் போய் குடியிருந்தான். 2 அந்த மனிதனுடைய பெயர் எலிமெலேக்கு , அவனுடைய மனைவியின் பெயர் நகோமி , அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவன் பெயர் மக்லோன் , மற்றொருவன் பெயர் கிலியோன் ; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியர்களாகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள். 3 நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு மகன்கள்மட்டும் இருந்தார்கள். 4 இவர்கள் மோவாபியப் பெண்களைத் திருமணம் செய்தார்கள்; அவர்களில் ஒருத்தியின் பெயர் ஒர்பாள் , மற்றவளுடைய பெயர் ரூத் ; அங்கே ஏறக்குறைய 10 வருடங்கள் வாழ்ந்தார்கள். 5 பின்பு மக்லோன் கிலியோன் என்ற அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்தப் பெண் தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னுடைய கணவனையும் இழந்து தனிமையானாள். 6 யெகோவா தம்முடைய மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு; தன்னுடைய மருமகள்களோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, 7 தன்னுடைய இரண்டு மருமகள்களோடு தான் இருந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டாள். யூதா தேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழியிலே நடந்துபோகும்போது, 8 நகோமி தன்னுடைய இரண்டு மருமகள்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டிற்குத் திரும்பிப்போங்கள்; இறந்துபோனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயவுசெய்ததுபோல, யெகோவா உங்களுக்கும் தயவுசெய்வாராக. 9 யெகோவா உங்கள் இருவருக்கும் கிடைக்கும் கணவனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாக வாழச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து: 10 உம்முடைய மக்களிடத்திற்கு உம்மோடு நாங்களும் வருவோம் என்றார்கள். 11 அதற்கு நகோமி: என் பிள்ளைகளே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடு ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குக் கணவனாவதற்கு, இனிமேல் என் கர்ப்பத்தில் எனக்கு மகன்கள் பிறப்பார்களோ? 12 என் பிள்ளைகளே, திரும்பிப்போங்கள்; நான் வயதானவள்; ஒரு கணவனோடு வாழத் தகுதியுள்ளவள் அல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாகி, நான் இன்று இரவில் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, மகன்களைப் பெற்றெடுத்தாலும், 13 அவர்கள் பெரியவர்களாகும்வரை, கணவனுக்கு வாழ்க்கைப்படாமல் நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது முடியாது; என் பிள்ளைகளே, யெகோவாவுடைய கை எனக்கு விரோதமாக இருக்கிறதினால், உங்களைக் குறித்து எனக்கு மிகுந்த துக்கம் இருக்கிறது என்றாள். 14 அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாக அழுதார்கள்; ஒர்பாள் தன்னுடைய மாமியாரை முத்தம் செய்துவிட்டுக் கடந்துபோனாள்; ரூத்தோ மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டாள். 15 அப்பொழுது அவள்: இதோ, உன்னுடைய சகோதரி தன்னுடைய மக்களிடத்திற்கும் தன்னுடைய தெய்வங்களிடத்திற்கும் திரும்பிப்போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பின்னே திரும்பிப்போ என்றாள். 16 அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடு பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய மக்கள் என்னுடைய மக்கள்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்படுவேன்; மரணத்தைத்தவிர வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். 18 அவள் தன்னோடு வர மனஉறுதியாக இருக்கிறதைக் கண்டு, அதன்பின்பு அதைக்குறித்து அவளோடு ஒன்றும் பேசவில்லை. 19 அப்படியே இருவரும் பெத்லெகேம்வரைக்கும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊர் மக்கள் எல்லோரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். 20 அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். 21 நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; யெகோவா என்னை வெறுமையாகத் திரும்பிவரச்செய்தார்; யெகோவா என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னை வருத்தப்படுத்தியிருக்கும்போது, நீங்கள் என்னை நகோமி என்று சொல்வது ஏன் என்றாள். 22 இப்படி, நகோமி மோவாபியப் பெண்ணாகிய தன்னுடைய மருமகள் ரூத்தோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமிற்கு வந்தார்கள். Chapter 2அத்தியாயம் 2 1 நகோமிக்கு அவளுடைய கணவனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பெயருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான். 2 மோவாபிய பெண்ணாகிய ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமோ, அவர் பின்னே போய் கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள். 3 அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பின்னே பொறுக்கினாள்; தற்செயலாக அவள் சென்ற அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாக இருந்தது. 4 அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: யெகோவா உங்களோடு இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள். 5 பின்பு போவாஸ் அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான். 6 அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் மறுமொழியாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடு வந்த மோவாபியப் பெண்பிள்ளை. 7 அறுக்கிறவர்களின் பின்னே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடம் கேட்டுக்கொண்டாள்; காலை துவங்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரம்தான் ஆனது என்றான். 8 அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறு வயலுக்கு போகாமலும், இந்த இடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடு இரு. 9 அவர்கள் அறுப்பு அறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பின்னே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களிடத்திற்குப் போய், வேலைக்காரர்கள் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான். 10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நிய தேசத்தைச் சேர்ந்தவளாக இருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயவு கிடைத்தது என்றாள். 11 அதற்கு போவாஸ் மறுமொழியாக: உன் கணவன் மரணமடைந்தபின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், நீ பிறந்த தேசத்தையும் விட்டு, இதற்கு முன்னே நீ அறியாத மக்களிடம் வந்ததும் எல்லாம் எனக்கு விபரமாகத் தெரிவிக்கப்பட்டது. 12 உன் செயல்களுக்குத் தகுந்த பலனைக் யெகோவா உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய சிறகுகளின்கீழ் அடைக்கலமாக வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். 13 அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமமாக இல்லாவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளாகிய என்னோடு தயவாகப் பேசினீரே என்றாள். 14 பின்பு போவாஸ் சாப்பாட்டு நேரத்தில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்தைப் சாப்பிட, புளிப்பான திராட்சை ரசத்திலே உன் அப்பத் துண்டுகளைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பு அறுக்கிறவர்களின் அருகில் உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீதியானதை வைத்துக்கொண்டாள். 15 அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஒன்றும் சொல்லவேண்டாம். 16 அவள் பொறுக்கிக்கொள்ளும்படி அவளுக்காக அரிகளிலே சிலவற்றைச் சிந்திவிடுங்கள், அவளை அதட்டாமல் இருங்கள் என்று கட்டளையிட்டான். 17 அப்படியே அவள் மாலைநேரம்வரைக்கும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துமுடிக்கும்போது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமையாக இருந்தது. 18 அவள் அதை எடுத்துக்கொண்டு ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமியார் பார்த்தாள்; தான் திருப்தியாகச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள். 19 அப்பொழுது அவளுடைய மாமியார்: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எந்த இடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடம் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமியாருக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரனுடைய பெயர் போவாஸ் என்றாள். 20 அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற யெகோவாவாலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனிதன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற பங்காளிகளில் ஒருவனுமாக இருக்கிறான் என்றாள். 21 பின்னும் மோவாபிய பெண்ணாகிய ரூத்: அவர் என்னை நோக்கி, என்னுடைய அறுவடை எல்லாம் முடியும்வரைக்கும், நீ என் வேலைக்காரிகளோடு இரு என்று சொன்னார் என்றாள். 22 அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனிதர்கள் உன்னை எதிர்க்காதபடி நீ அவனுடைய வேலைக்காரிகளோடு போகிறது நல்லது என்றாள். 23 அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் முடியும்வரைக்கும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடு இருந்து, தன் மாமியாரோடு வாழ்ந்தாள். Chapter 3அத்தியாயம் 3 1 பின்பு அவள் மாமியாராகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு சவுக்கியத்தைத் தேடாமல் இருப்பேனோ? 2 நீ போவாசின் வேலைக்காரிகளோடு இருந்தாயே, அவன் நம்முடைய உறவினன் அல்லவா? இதோ, அவன் இன்று இரவு களத்திலே வாற்கோதுமை தூற்றுவான். 3 நீ குளித்து, எண்ணெய் பூசி, உன்னுடைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனிதன் சாப்பிட்டுக் குடித்து முடிக்கும்வரைக்கும் அவனுடைய கண்களுக்கு எதிர்ப்படாமல் இரு. 4 அவன் படுத்துக்கொண்டபின்பு, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்து போய், அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது என்னவென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள். 5 இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள். 6 அவள் களத்திற்குப்போய், தன் மாமியார் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தாள். 7 போவாஸ் சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இருந்து, ஒரு அம்பாரத்தின் அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெதுவாகச்சென்று, அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கிப் படுத்துக்கொண்டாள். 8 நடுஇரவிலே, அந்த மனிதன் திடுக்கிட்டுத் திரும்பி, ஒரு பெண் தன்னுடைய பாதத்தின் அருகிலே படுத்திருக்கிறதைக் கண்டு, 9 நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாளின்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் உறவினன் என்றாள். 10 அதற்கு அவன்: மகளே, நீ யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ ஏழைகளும் பணக்காரர்களுமான வாலிபர்களின் பின்னே போகாததினால், உன்னுடைய முந்தின நற்குணத்தைவிட உன்னுடைய பிந்தின நற்குணம் உத்தமமாக இருக்கிறது. 11 இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் மக்களாகிய ஊரார் எல்லோரும் அறிவார்கள். 12 நான் உறவினன் என்பது உண்மைதான்; ஆனாலும் என்னைவிட நெருங்கின உறவினன் ஒருவன் இருக்கிறான். 13 இன்று இரவு தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னை உறவின்முறைப்படித் திருமணம்செய்யச் சம்மதித்தால் நல்லது, அவன் திருமணம் செய்யட்டும்; அவன் உன்னைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால் நான் உன்னை உறவின்முறைப்படித் திருமணம்செய்வேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலம்வரை படுத்துக்கொண்டிரு என்றான். 14 அவள் விடியற்காலம்வரைக்கும் அவனுடைய பாதத்தின் அருகே படுத்திருந்து, களத்திற்கு ஒரு பெண் வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரிவதற்கு முன்னே எழுந்திருந்தாள். 15 அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான். 16 அவள் தன் மாமியாரிடம் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனிதன் தனக்குச் செய்தவைகளையெல்லாம் அவளுக்கு விவரித்துச் சொன்னாள். 17 மேலும் அவர், நீ உன் மாமியாரிடத்திற்கு வெறுமையாகப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள். 18 அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னவாக முடியும் என்று நீ அறியும்வரை பொறுமையாக இரு; அந்த மனிதன் இன்றைக்கு இந்தக் காரியத்தைச் செய்து முடிக்கும்முன் ஓயமாட்டான் என்றாள். Chapter 4அத்தியாயம் 4 1 போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்த உறவினன் அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓ அண்ணே, என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான். 2 அப்பொழுது அவன் பட்டணத்தின் பெரியவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள். 3 அப்பொழுது அவன் அந்த உறவினனை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள். 4 ஆகவே, நீர் அதை ஊர் மக்களுக்கு முன்பாகவும், என்னுடைய மக்களின் பெரியவர்களுக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்குத் தெரிவிக்கவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதை உறவுமுறையாக மீட்டுக்கொள்ள விருப்பமாக இருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள விருப்பமில்லாதிருந்தால், நான் அதைத் தெரிந்துகொள்ளும்படி எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கக்கூடியவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான். 5 அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவனுடைய பெயரை நிலைநிற்கச்செய்யும்படிக்கு, மரித்தவனுடைய மனைவியாகிய மோவாபியப் பெண்ணாகிய ரூத்தைத் திருமணம் செய்யவேண்டும் என்றான். 6 அப்பொழுது அந்த உறவினன்: நான் என் சுதந்திரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கவேண்டியதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான். 7 மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் எல்லாக் காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன்னுடைய காலணியைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழக்கமாக இருந்த உறுதிப்பாடு. 8 அப்படியே அந்த உறவினன் போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன்னுடைய காலணியைக் கழற்றிப்போட்டான். 9 அப்பொழுது போவாஸ் பெரியவர்களையும் எல்லா மக்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி. 10 இதுவுமல்லாமல், இறந்தவனுடைய சகோதரர்களுக்குள்ளும், ஊரார்களுக்குள்ளும், அவனுடைய பெயர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்திரத்திலே அவனுடைய பெயரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாக இருந்த மோவாபியப் பெண்ணான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான். 11 அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற எல்லா மக்களும் பெரியவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன்னுடைய வீட்டிற்கு வருகிற மனைவியைக் யெகோவா இஸ்ரவேல் வீட்டைக் கட்டின இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாக இருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய். 12 இந்தப் பெண்ணிடம் யெகோவா உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்ததியினாலே, உன்னுடைய வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள். 13 போவாஸ் ரூத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளுடன் வாழ்ந்தபோது, அவள் கர்ப்பமடைந்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்றெடுக்கக் யெகோவா அருள்செய்தார். 14 அப்பொழுது பெண்கள் நகோமியைப் பார்த்து: உறவினன் இல்லாமல்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயவுசெய்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; அவனுடைய பெயர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது. 15 அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாக இருப்பானாக; உன்னைச் சிநேகித்து, ஏழு மகன்களைப்பார்க்கிலும் உனக்கு அருமையாக இருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றெடுத்தாளே என்றார்கள். 16 நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள். 17 அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பெயரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன். 18 பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான். 19 எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான். 20 அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான். 21 சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான். 22 ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.