அத்தியாயம் 8
யூதர்களுக்கான ராஜாவின் கட்டளை
1 அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதர்களின் விரோதியாக இருந்த ஆமானின் வீட்டை ராணியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜாவிற்கு முன்பாக வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.
2 ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிய தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரண்மனைக்கு அதிகாரியாக வைத்தாள்.
3 பின்னும் எஸ்தர் ராஜாவிடம் பேசி, அவனுடைய பாதங்களில் விழுந்து அழுது, ஆகாகியனான ஆமானின் தீவினையையும் அவன் யூதர்களுக்கு விரோதம் செய்ய யோசித்த யோசனையையும் மாற்ற அவனிடம் விண்ணப்பம் செய்தாள்.
4 அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்து ராஜாவிற்கு முன்பாக நின்று:
5 ராஜாவிற்கு விருப்பமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவிற்கு முன்பாக நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாக இருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதர்களை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீய எண்ணத்தோடு எழுதின கட்டளைகள் செல்லாமல் போகச்செய்யும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.
6 என்னுடைய மக்களின்மேல் வரும் தீங்கை நான் எப்படிப் பார்க்கமுடியும்? என்னுடைய உறவினர்களுக்கு வரும் அழிவை நான் எப்படி சகிக்கமுடியும்? என்றாள்.
7 அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராணியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்களை தாக்க துணிந்தபடியால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
8 இப்போதும் உங்களுக்கு விருப்பமானபடி நீங்கள் ராஜாவின் பெயரால் யூதர்களுக்காக எழுதி ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடுங்கள்; ராஜாவின் பெயரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடப்பட்டதைச் செல்லாமல் போகச்செய்ய ஒருவராலும் முடியாது என்றான்.
9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாம் தேதிலே ராஜாவின் எழுத்தர்கள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதர்களுக்கும் இந்திய தேசம்முதல் எத்தியோப்பியா தேசம் வரையுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த தேசத்தில் பேசுகிற மொழிகளிலும், அந்தந்த ஜாதியார் பேசும் மொழியிலும், யூதர்களுக்கும் அவர்களுடைய தேசத்தில் பேசுகிற மொழிகளிலும் அவர்களுடைய சொந்த மொழிகளிலும் எழுதப்பட்டது.
10 அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பெயரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடப்பட்டபின்பு, குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் வேகமாக ஓடுகிற குதிரைகள் மேல்ஏறிப்போகிற தபால்காரர்கள் கையில் அனுப்பப்பட்டது.
11 அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் தேதியாகிய அந்த ஒரே நாளிலே,
12 அந்தந்த நாடுகளில் இருக்கிற யூதர்கள் ஒன்றாகச் சேர்ந்து, தங்களுடைய உயிரைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் எதிரிகளாகிய மக்களும், தேசத்தைச் சேர்ந்தவர்களுமான எல்லோரையும், அவர்களுடைய குழந்தைகளையும், பெண்களையும் கொன்று அழிக்கவும், அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதர்களுக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது.
13 யூதர்கள் தங்களுடைய பகைவர்களைப் பழிவாங்கும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று அந்தந்த நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரபலப்படுத்தப்பட்டது.
14 அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின தபால்காரர்கள் ராஜாவின் வார்த்தையால் ஏவப்பட்டு, விரைவாக புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரண்மனையில் கொடுக்கப்பட்டது.
15 அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜஉடையும், பெரிய பொற்கிரீடமும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாக ராஜாவிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.
16 இவ்விதமாக யூதர்களுக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டானது.
17 ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதர்களுக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாக இருந்தது; யூதர்களுக்குப் பயப்படுகிற பயம் தேசத்து மக்களைப் பிடித்ததால், அவர்களில் அநேகர் யூத மார்க்கத்தில் இணைந்தார்கள்.