யோனா
ஆசிரியர்
யோனா தான் இதன் ஆசிரியர் என்று 1:1, ல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நாசரேத் ஊருக்கு அருகில் உள்ள காத் ஏபர் என்ற ஊரை சேர்ந்தவன். இப்பொழுது கலிலேயா என்று அழைக்கப்படுகிறது. 2. ராஜா (7:11-20) இஸ்ரவேலின் வடக்கு ராஜ்ஜியத்திலிருந்து எழும்பின சில தீர்க்கதரிசிகளில் யோனாவும் ஒருவனாயிருந்தான். தேவனுக்கு கீழ்படியதவர்களுக்கும் தேவன் கிருபையாய் பொறுமையாய் இருந்து இரண்டாம் வாய்ப்பையும் கொடுகிறார் என்று இந்த புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 793 க்கும் 450 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
இந்த சரித்திரம் இஸ்ரவேலில் தொடங்கி, மத்தியதரைக்கடலில் உள்ள யோப்பா துறைமுகத்திற்குப் போய், தைக்ரிஸ் நதிப்பக்கம் உள்ள அசீரிய தேசத்தின் தலைநகரமான நினிவே பட்டணத்தில் முடிகிறது.
யாருக்காக எழுதப்பட்டது
இஸ்ரவேல் ஜனங்களுக்கும் வேதத்தை வாசிப்பவர்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
கீழ்படியாமையும், எழுப்புதலும் இந்த புத்தகத்தின் கருத்துகளாகும். பெரிய மீனின் வயிற்றிலே மனம்மாறின யோனாவின் வித்தியாசமான அனுபவம் எழுதப்பட்டிருக்கிறது. அவனுடைய கீழ்படியாமை தன் எழுப்புதலுக்கும் மாத்திரமல்ல, நினிவே, தேசத்திற்கும் முழுவதும் எழுப்புதல் வந்தது. தேவனுடைய செய்தி ஒரு குறிப்பிட்ட ஜனங்களுக்கு மாத்திரமல்ல, உலகமனைத்திற்கும் சொந்தமாகும். தேவன் உண்மையான மனம்திரும்புதலை விரும்புகிறார். மனிதர்கள் காணும்படி செய்கிற நல்லக் காரியங்களை அல்ல, நம்முடைய இருதய மாறுதலையே விரும்புகிறார்.
மையக் கருத்து
எல்லா ஜனங்களுக்கும் கிடைக்கும் தேவனின் கிருபை.
பொருளடக்கம்
1. யோனாவின் கீழ்படியாமை — 1:1-14
2. யோனாவை பெரிய மீன் விழுங்கிவிட்டது — 1:15, 16
3. யோனாவின் மனம்திரும்புதல் — 1:17-2:10
4. யோனா நினிவேயில் பிரசங்கிப்பது — 3:1-10
5. தேவனுடைய இரக்கத்தின் மேல் யோனா கோபம் கொள்ளுகிறான் — 4:1-11
அத்தியாயம் 1
யோனா யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடுதல்
1 அமித்தாயின் மகனாகிய யோனாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்:
2 நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம் செய்; அவர்களுடைய அக்கிரமம் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது என்றார்.
3 அப்பொழுது யோனா யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போவதற்கா எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கட்டணம் செலுத்தி, தான் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகும்படி, அவர்களோடு தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
4 யெகோவா கடலின்மேல் பெருங்காற்றை அனுப்பினார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமளவிற்கு பெரிய கொந்தளிப்பு உண்டானது.
5 அப்பொழுது கப்பற்காரர்கள் பயந்து, அவனவன் தன்தன் தெய்வங்களை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தைக் குறைப்பதற்காக கப்பலில் இருந்த சரக்குகளைக் கடலில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோ கப்பலின் கீழ்த்தளத்தில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து தூங்கினான்.
6 அப்பொழுது மாலுமி அவனிடம் வந்து: நீ தூங்கிக் கொண்டிருக்கிறது என்ன? எழுந்திருந்து உன்னுடைய தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாமலிருக்க உன்னுடைய தெய்வம் ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
7 அவர்கள் யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நாம் தெரிந்துகொள்ள சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பெயருக்குச் சீட்டு விழுந்தது.
8 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.
9 அதற்கு அவன்: நான் எபிரெயன்; கடலையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடம் பயபக்தியுள்ளவன் என்றான்.
10 அவன் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனிதர்கள் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.
11 பின்னும் கடல் அதிகமாகக் கொந்தளித்துக்கொண்டிருந்ததால், அவர்கள் அவனை நோக்கி: கடல் நமக்காக அமைதியாகும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
12 அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்து கடலிலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது கடல் அமைதியாக இருக்கும்; என்னால்தான் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.
13 அந்த மனிதர்கள் கரைசேருவதற்காக வேகமாகத் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் கடல் மிகவும் மும்முரமாகக் கொந்தளித்துக் கொண்டேயிருந்ததால் அவர்களால் முடியாமற்போனது.
14 அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: ஆ யெகோவாவே, இந்த மனிதனுடைய ஜீவனுக்காக எங்களை அழித்துப்போடாதிரும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதிரும்; தேவரீர் யெகோவா; உமக்குச் சித்தமாக இருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,
15 யோனாவை எடுத்துக் கடலிலே போட்டுவிட்டார்கள்; கடல் தன்னுடைய மும்முரத்தைவிட்டு அமைதியானது.
16 அப்பொழுது அந்த மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, யெகோவாவுக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைச் செய்தார்கள்.
17 யோனாவை விழுங்குவதற்காக ஒரு பெரிய மீனை யெகோவா ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீனின் வயிற்றிலே யோனா இரவுபகல் மூன்றுநாட்கள் இருந்தான்.