அத்தியாயம் 30
ஆகூரின் நீதிமொழிகள்
யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து,
ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன உபதேச வாக்கியங்கள்:
மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்;
மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.
நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை,
பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.
வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்?
காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்?
தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்?
பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்?
அவருடைய பெயர் என்ன?
அவருடைய மகனுடைய பெயர்
என்ன? அதை அறிவாயோ?
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;
தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே,
கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார்,
நீ பொய்யனாவாய்.
இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்;
நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.
மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்;
தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக.
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்;
தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும்,
என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும்.
10 எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே;
அவன் உன்னைச் சபிப்பான்,
நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.
11 தங்களுடைய தகப்பனைச் சபித்தும்,
தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு.
12 தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும்,
தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு.
13 வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள்.
14 தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும்
சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு.
15 கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு.
திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு.
16 அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும்,
தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே.
17 தகப்பனைப் பரியாசம்செய்து,
தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும்,
கழுகின் குஞ்சுகள் சாப்பிடும்.
18 எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு,
என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு.
19 அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும்,
கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும்,
ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே.
20 அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது;
அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து;
நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.
21 மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது,
நான்கையும் அது தாங்கமுடியாது.
22 அரசாளுகிற அடிமைக்காகவும்,
உணவால் திருப்தியான மூடனுக்காகவும்,
23 பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும்,
தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே.
24 பூமியில் சிறியவைகளாக இருந்தும்,
மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு.
25 அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும்,
கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும்,
26 பெலமில்லாத உயிரினமாக இருந்தும்,
தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும்,
27 ராஜா இல்லாமல் இருந்தும்,
கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
28 தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி,
அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
29 விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு;
விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு.
30 அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும்,
31 பெருமையாய் நடக்கிற சேவலும் * , வெள்ளாட்டுக் கடாவும்,
ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே.
32 நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து,
துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு.
33 பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்;
மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்;
அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
* அத்தியாயம் 30:31 போர்க்குதிரை