2 இராஜாக்கள்
ஆசிரியர்
ஆதியிலே 1 மற்றும் 2 இராஜாக்கள் புத்ததகங்கள் ஒரே புத்தகமாக இருந்தது. யூத பாரம்பரியம் எரேமியா தீர்க்கதரிசிதான் இதை எழுதியிருக்கிறான் என்று கருதுகிறது. ஆனால் தற்கால வேத வல்லுனர்கள் இதை அநேகர் சேர்ந்து குழுவாக எழுதியிருக்கலாம் என்கிறார்கள். உபாகமத்தின் நோக்கமான கர்த்தருக்கு கீழ்படிதல் ஆசிர்வாதங்களையும் கீழ்படியாமை, சாபங்களை கொண்டு வருகிறது என்பதை ஆணித்தரமாக இது தெளிவாக விவரிக்கிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
யாருக்காக எழுதப்பட்டது
இஸ்ரவேல் ஜனங்களுக்கும் வேதத்தை வாசிக்கிற அனைவருக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
2 இராஜாக்கள் புத்தகம் 1 இராஜாக்கள் புத்தகத்தின் தொடர்ச்சி ஆகும். பிரிக்கப்பட்ட யூதா, இஸ்ரவேல் இராஜ்ஜியங்களின் இராஜாக்களின் சரித்திரங்களை விவரிக்கிறது. 2 இராஜாக்கள் புத்தகம் யூத ஜனங்கள் பாபிலேனுக்கும் இஸ்ரவேல் கோத்திரத்தின் ஜனங்கள் அசீரியா தேசத்திற்கும் சிறையாக கொண்டுபோகப்பட்டார்கள் என்று முடிக்கிறது.
மையக் கருத்து
சிதறடிக்கபடுதல்.
பொருளடக்கம்
1. எலிசாவின் ஊழியம் — 1:1-8:29
2. ஆகாபின் வம்சம் ஒழிக்கப்பட்டது — 9:1-11:21
3. யோவாசின் முதல் இஸ்ரவேல் தேசத்தின் சிறையிருப்பு வரை — 12:1-17:41
4. எசேக்கியா இராஜா முதல் யூத தேசத்தின் சிறையிருப்பு வரை — 18:1-25:30
அத்தியாயம் 1
அகசியாவுக்கு வந்த தேவனுடைய நியாயத்தீர்ப்பு
1 ஆகாப் மரணமடைந்தபின்பு, மோவாபியர்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கலகம்செய்து பிரிந்துபோனார்கள். 2 அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டின் ஜன்னலிலிருந்து விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.
3 யெகோவாவுடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களைச் சந்தித்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்? 4 இதனால் நீ ஏறிப்படுத்த கட்டிலிலிருந்து இறங்காமல், நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.
5 அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் ஏன் திரும்பிவந்தீர்கள் என்று அவன் அவர்களிடம் கேட்டான். 6 அதற்கு அவர்கள்: ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.
7 அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களைச் சந்தித்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனிதனின் தோற்றம் எப்படி இருந்தது என்று கேட்டான். 8 அதற்கு அவர்கள்: அவன் கம்பளி உடையை அணிந்து, தோல் கச்சையைத் தன் இடுப்பிலே கட்டியிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;
9 அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான். 10 அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.
11 மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னைச் சீக்கிரமாக வரச்சொல்லுகிறார் என்றான். 12 எலியா அவர்களுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன்னுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரித்தது.
13 மறுபடியும் மூன்றாவது முறை ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; இந்த மூன்றாவது தலைவன் ஏறிவந்து, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனிதனே, என்னுடைய உயிரும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் உயிரும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக. 14 இதோ, வானத்திலிருந்து அக்கினி இறங்கி, முந்தின இரண்டு தலைவர்களையும், அவரவர்களுடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்தது; இப்போதும் என்னுடைய உயிர் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.
15 அப்பொழுது யெகோவாவுடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய், 16 அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
17 எலியா சொன்ன யெகோவாவுடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான்; அவனுக்கு மகன் இல்லாததால், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய மகனான யோராமின் இரண்டாம் வருடத்தில் யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான். 18 அகசியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.