ஆதி. 12. யெகோவா ஆபிராமை நோக்கி: “நீ உன் பிறந்த தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ. நான் உன்னைப் பெரிய இனமாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாக இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்மூலம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார். அந்த தேசத்திலே பஞ்சம் உண்டானது; தேசத்திலே பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்குவதற்காக அந்த இடத்திற்குப் போனான். அவன் எகிப்திற்கு அருகில் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: “நீ பார்ப்பதற்கு அழகுள்ள பெண் என்று எனக்குத் தெரியும். எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது, நீ என்னுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடு வைப்பார்கள். ஆகையால், உன்னால் எனக்கு நன்மை உண்டாவதற்கும், உன்னாலே என் உயிர் பிழைப்பதற்கும், நீ உன்னை என்னுடைய சகோதரி என்று சொல்” என்றான்.