ஆதி. 32. யாக்கோபு பயணம் செய்யும்போது, தேவதூதர்கள் அவனை சந்தித்தார்கள். யாக்கோபு அவர்களைக் கண்டபோது: “இது தேவனுடைய படை” என்று சொல்லி, அந்த இடத்திற்கு மகனாயீம் என்று பெயரிட்டான். பின்பு, யாக்கோபு ஏதோமின் எல்லையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடம் போவதற்காக ஆட்களை வரவழைத்து: “நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடம் போய், நான் இதுவரை லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும், எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான்” என்று சொல்லுவதற்குக் கட்டளைகொடுத்துத் தனக்கு முன்பாக அவர்களை அனுப்பினான். அந்தப்படியே வெகுமதிகள் அவனுக்குமுன் போனது; அவனோ அன்று இரவில் முகாமிலே தங்கி,