ஆதி. 50. அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தம்செய்தான். பின்பு, தன் தகப்பனுடைய உடலைப் பதப்படுத்தும்படி யோசேப்பு தன் வேலைக்காரர்களாகிய வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர்கள் இஸ்ரவேலைப் பதப்படுத்தினார்கள். பதப்படுத்த 40 நாட்கள் ஆகும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள். துக்கம் அனுசரிக்கும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: “உங்கள் கண்களில் எனக்கு தயவுகிடைத்ததானால், நீங்கள் பார்வோனுடைய காது கேட்க அவருக்கு தெரிவிக்கவேண்டியது என்னவென்றால், என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம் செய்யவேண்டும் என்று என்னிடத்தில் சொல்லி, உறுதிமொழி வாங்கிக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்செய்து வருவதற்கு அனுமதிகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள்” என்றான். அதற்குப் பார்வோன்: “உன் தகப்பன் உன்னிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டபடியே, நீ போய், அவரை அடக்கம்செய்து வா” என்றான். யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்தபின்பு, அவனும் அவனுடைய சகோதரர்களும், அவனுடைய தகப்பனை அடக்கம்செய்வதற்கு அவனோடுகூடப் போனவர்கள் அனைவரும் எகிப்திற்குத் திரும்பினார்கள். யோசேப்பும் அவனுடைய தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு 110 வருடங்கள் உயிரோடிருந்தான். யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் மகனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.