யாத். 10. பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போ, அவர்களின் நடுவே நான் என்னுடைய இந்த அடையாளங்களைச் செய்யும்படி, நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என்னுடைய அடையாளங்களையும், நீ உன்னுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும், உன்னுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படியும், நானே யெகோவா என்பதை நீங்கள் அறியும்படியும், நான் அவனுடைய இருதயத்தையும் அவனுடைய வேலைக்காரர்களின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன்” என்றார். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து கல்மழையால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் சாப்பிடும்படி, எகிப்து தேசத்தின்மேல் உன்னுடைய கையை நீட்டு” என்றார். அப்படியே மோசே தன்னுடைய கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா அன்று பகல் முழுவதும், அன்று இரவுமுழுவதும் கிழக்குக்காற்றை தேசத்தின்மேல் வீசச்செய்தார்; அதிகாலையில் கிழக்குக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது. அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “தடவிக்கொண்டிருக்கும்படியான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படி, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார். மோசே தன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாட்கள்வரை காரிருள் உண்டானது. மூன்றுநாட்கள்வரை ஒருவரையொருவர் பார்க்கவும் இல்லை, ஒருவரும் தம்முடைய இடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் அவர்கள் வாழ்ந்த இடத்திலே வெளிச்சம் இருந்தது.