யாத். 16. இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் ஏலிமைவிட்டு பயணம்செய்து, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள். அந்த வனாந்திரத்திலே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: “நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களின் அருகிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்தில், யெகோவாவின் கையால் செத்துப்போனால் பரவாயில்லை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படச்செய்து, இந்த வனாந்திரத்திலே அழைத்துவந்தீர்களே” என்று அவர்களிடம் சொன்னார்கள். ஆரோன் இஸ்ரவேல் மக்களாகிய சபையார்களுக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்திரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது. யெகோவா மோசேயை நோக்கி: “இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களுடன் பேசி, நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல்” என்றார். ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டுமடங்காக ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர்கள் எல்லோரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள். அவன் அவர்களை நோக்கி: “யெகோவா சொன்னது இதுதான்; நாளைக்குக் யெகோவாவுக்குறிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேகவைக்கவேண்டியதை வேகவைத்து, மீதியாக இருக்கிறதையெல்லாம் நாளைவரை உங்களுக்காக வைத்துவையுங்கள்” என்றான்.