யாத். 23. “அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாதே; கொடுமையுள்ள சாட்சிக்காரனாக இருக்க ஆகாதவனோடு சேராதே. தீமைசெய்ய அநேகம்பேர்களின் வழியைப் பின்பற்றாதே; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட கூட்டத்தின் பக்கம் சாய்ந்து, தீர்ப்பு சொல்லாதே. வழக்கிலே தரித்திரனுடைய முகத்தைப் பார்க்காதே. உன்னுடைய எதிரியின் மாடோ அவனுடைய கழுதையோ தப்பிப்போவதைப் பார்த்தால், அதைத் திரும்ப அவனிடம் கொண்டுபோய் விடு. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடு விழுந்திருப்பதைப் பார்த்தால், அதற்கு உதவிசெய்யாமல் இருக்கலாமா? அவசியமாக அவனுடன்கூட அதற்கு உதவிசெய்யவேண்டும். உன்னிடத்தில் இருக்கிற எளியவனுடைய வழக்கிலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே. தவறான காரியத்தை விட்டுவிலகு; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாதே; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன். லஞ்சம் வாங்காதே; லஞ்சம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். அந்நியனை ஒடுக்காதே; எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே. ஆறுவருடங்கள் நீ உன்னுடைய நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள். ஏழாம் வருடத்தில் உன்னுடைய மக்களிலுள்ள எளியவர்கள் சாப்பிடவும், மீதியானதை வெளியின் மிருகங்கள் சாப்பிடவும், அந்த நிலம் சும்மாகிடக்க விட்டுவிடு; உன்னுடைய திராட்சைத்தோட்டத்தையும் உன்னுடைய ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்யவேண்டும். வருடத்தில் மூன்றுமுறை எனக்குப் பண்டிகை அனுசரி. புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடி ஆபீப் மாதத்தின் குறித்தகாலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என்னுடைய சந்நிதியில் வெறுங்கையுடன் வரவேண்டாம். எனக்கு பலியிடும் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு பலியிடும் கொழுப்பை அதிகாலைவரைக்கும் வைக்கவும் வேண்டாம். உன்னுடைய நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதல் கனியை உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும்; வெள்ளாட்டுக்குட்டியை அதனுடைய தாயின் பாலோடு சமைக்கவேண்டாம். வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்செய்த இடத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவருடைய சமுகத்தில் எச்சரிக்கையாக இருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்களுடைய துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என்னுடைய பெயர் அவருடைய உள்ளத்தில் இருக்கிறது. நீ அவருடைய வாக்கை நன்றாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்தால், நான் உன்னுடைய எதிரிகளுக்கு எதிரியாகவும், உன்னுடைய விரோதிகளுக்கு விரோதியாகவும் இருப்பேன்.