எண். 9. அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதத்தில் யெகோவா சீனாய் வனாந்திரத்தில் மோசேயை நோக்கி: “குறித்த காலத்தில் இஸ்ரவேல் மக்கள் பஸ்காவை அனுசரிக்கவேண்டும். இந்த மாதம் பதினான்காம்தேதி மாலை வேளையாகிய குறித்த காலத்தில் அதை அனுசரிக்கவேண்டும்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைகளின்படியேயும் அதை அனுசரிக்கவேண்டும் என்றார். வாசஸ்தலம் பிரதிஷ்டைசெய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடியது; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டானது; அது அதிகாலைவரை இருந்தது. இப்படி எப்போதும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது. மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்வார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் மக்கள் முகாமிடுவார்கள்.