உபா. 3. “பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப்போகிற வழியாகப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல மக்களோடும் நம்மை எதிர்த்துப் போர்செய்யும்படிப் புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய மக்கள் எல்லோரையும் அவனுடைய தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோல, அவனுக்கும் செய்வாய் என்றார். “அக்காலத்திலே சொந்தமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் துவங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் கொடுத்தேன். கீலேயாத்தின் மற்றப் பங்கையும், ஓகின் ராஜ்ஜியமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்ததுமல்லாமல், இராட்சத தேசம் என்று கருதப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் பகுதி முழுவதையும் கொடுத்தேன். அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய யெகோவா அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன்னுடைய கண்கள் கண்டது; நீ போய்ச்சேரும் எல்லா ராஜ்ஜியங்களுக்கும் யெகோவா அப்படியே செய்வார். அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய யெகோவாவே உங்களுக்காகப் போர் செய்வார் என்று சொன்னேன்.