உபா. 15. “ஏழாம் வருடத்தின் முடிவிலே விடுதலைசெய்வாயாக. விடுதலையின் விபரமாவது: மற்றவனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், யெகோவா நியமித்த விடுதலை கூறப்பட்டதால், அந்தக் கடனை மற்றவனிடத்திலாவது தன் சகோதரனிடத்திலாவது வாங்காமல் விட்டுவிடுவானாக. அந்நியனிடத்தில் நீ கடனை வசூலிக்கலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடுவதாக. “உன் சதோதரனாகிய எபிரெய ஆணாகிலும் பெண்ணாகிலும் உனக்கு விற்கப்பட்டால், ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்; ஏழாம் வருடத்தில் அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடுவாயாக. அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாக அனுப்பிவிடாமல், உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாகக் கொடுத்து அனுப்பிவிடுவாயாக. “உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலை வாங்காமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரிக்காமலும் இருப்பாயாக. யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே வருடந்தோறும் நீயும் உன் வீட்டாருமாக உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைச் சாப்பிடுங்கள். அதற்கு ஊனம், குருடு முதலான யாதொரு குறையிருந்தால், அதை உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிட வேண்டாம்.