உபா. 18. “லேவியர்களாகிய ஆசாரியர்களும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் மக்களுடன் பங்கும் உரிமையும் இல்லாதிருப்பதாக; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளையும் அவருக்கு உரிமையானவைகளையும் அவர்கள் சாப்பிடலாம். அவர்களுடைய சகோதரர்களுக்குள்ளே அவர்களுக்கு உரிமையில்லை; யெகோவா அவர்களுக்குச் சொன்னபடியே, அவரே அவர்களுடைய சொத்து. “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேரும்போது, அந்த மக்கள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம். தன் மகனையாவது தன் மகளையாவது தகனபலியாகத் தீயில் பலியிடுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், ஜோதிடம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், வசியக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். “நீ துரத்திவிடப்போகிற இந்த மக்கள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய யெகோவா உத்திரவுகொடுக்கமாட்டார்.