நியாயாதி. 4. ஏகூத் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பக் யெகோவாவுடைய பார்வைக்குத் தீமையானதைச் செய்துவந்தார்கள். ஆகவே, யெகோவா அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியர்களுடைய ராஜாவின் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவனுடைய தளபதிக்கு சிசெரா என்று பெயர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான். அவனுக்குத் 900 இரும்பு ரதங்கள் இருந்தன; அவன் இஸ்ரவேல் மக்களை இருபது வருடங்கள் கொடுமையாக ஒடுக்கினான்; இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டார்கள்.