நியாயாதி. 10. அபிமெலேக்குக்கு இறந்தப் பின்பு, தோதோவின் மகனான பூவாவின் மகன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை காப்பாற்ற எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான். அவன் இஸ்ரவேலை 23 வருடங்கள் நியாயம் விசாரித்து, பின்பு இறந்து, சாமீரிலே அடக்கம் செய்யப்பட்டான். தோலா இறந்தப் பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை 22 வருடங்கள் நியாயம் விசாரித்தான். முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது மகன்கள் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்த நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்கள் என்கிற பெயர் இருக்கிறது. யாவீர் இறந்து, காமோன் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள். அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபமடைந்து, அவர்களைப் பெலிஸ்தர்கள் கையிலும், அம்மோனியர்களின் கையிலும் ஒப்புக்கொடுத்தார். அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள். அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.