ரூத். 1. நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவந்த நாட்களில், தேசத்தில் பஞ்சம் உண்டானது; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோடும், இரண்டு மகன்களோடும் மோவாப் தேசத்திற்குப் போய் குடியிருந்தான். அந்த மனிதனுடைய பெயர் எலிமெலேக்கு , அவனுடைய மனைவியின் பெயர் நகோமி , அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவன் பெயர் மக்லோன் , மற்றொருவன் பெயர் கிலியோன் ; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியர்களாகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.