1 சாமு. 16. யெகோவா சாமுவேலைப் பார்த்து: இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எதுவரை துக்கப்பட்டுக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்திற்கு உன்னை அனுப்புவேன்; அவனுடைய மகன்களில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். யெகோவாவுடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு தீய ஆவி அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது சவுலின் ஊழியக்காரர்கள் அவனை பார்த்து: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு தீய ஆவி உம்மை அலைக்கழிக்கிறதே. சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட தீய ஆவி உம்மேல் இறங்கும்போது, அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சுகமுண்டாகும் என்றார்கள்.