1 இராஜா. 4. ராஜாவாகிய சாலொமோன் அனைத்து இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக இருந்தான். அவனுக்கு இருந்த அதிகாரிகள்: சாதோக்கின் மகனாகிய அசரியா ஆசாரியனாக இருந்தான். சீசாவின் மகனாகிய ஏலிகோரேப்பும் அகியாவும் எழுத்தர்களாக இருந்தார்கள்; அகிலூதின் மகன் யோசபாத் மந்திரியாக இருந்தான். யோய்தாவின் மகன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாக இருந்தார்கள். யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலைப்போல அதிகமாக இருந்து, சாப்பிட்டுக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். நதிதுவங்கி, பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாக எகிப்தின் எல்லைவரை இருக்கிற சகல ராஜ்ஜியங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுக்கு பணிவிடை செய்தார்கள். ஒரு நாளுக்கு சாலொமோனுக்கு ஆகும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும், கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாகும். தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலைப்போல பரந்த புரிந்துகொள்ளும் திறனையும் கொடுத்தார். சகல கிழக்குப்பகுதி மக்களின் ஞானத்தையும் எகிப்தியர்களின் சகல ஞானத்தையும்விட சாலொமோனின் ஞானம் சிறந்ததாக இருந்தது. அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் மகன்களிலும், மற்ற எல்லா மனிதர்களிலும் ஞானவானாக இருந்தான்; சுற்றிலும் இருந்த சகல தேசங்களிலும் அவன் புகழ் பிரபலமாக இருந்தது.