2 இராஜாக்கள். 15. இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருட ஆட்சியில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் மகன் அசரியா ராஜாவானான். அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள். அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருட ஆட்சியில் யெரொபெயாமின் மகனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறு மாதங்கள் ஆட்சிசெய்து, தன் முன்னோர்கள் செய்ததுபோல, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை. யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருட ஆட்சியில் யாபேசின் மகனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் ஆட்சிசெய்தான். காதியின் மகனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் மகனாகிய சல்லூமை சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் ஆளுகை வருடத்தில், காதியின் மகனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருடங்கள் அரசாட்சிசெய்து, அவன் தன் நாட்களிலெல்லாம் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகாதிருந்தான். யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருட ஆட்சியில், மெனாகேமின் மகனாகிய பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டுவருடங்கள் அரசாட்சிசெய்து, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகவில்லை. யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருட, ரெமலியாவின் மகனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருடங்கள் அரசாட்சிசெய்து, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை. இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் மகன் பெக்காவின் இரண்டாம் வருட ஆட்சியில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் மகன் யோதாம் ராஜாவானான். அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருடங்கள் ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள்.