யோபு. 1. ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான்: அந்த மனிதன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். அவனுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தார்கள். அவனுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 500 ஏர்மாடுகளும், 500 கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, மிகுதியான வேலைக்காரர்களும் இருந்தார்கள்; அதினால் அந்த மனிதன் கிழக்குப்பகுதியின் மக்களில் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். ஒருநாள் தேவதூதர்கள் யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். யெகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். யெகோவா சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.