பிரச. 7. விலையுயர்ந்த நறுமண தைலத்தைவிட நற்புகழும், ஒருவனுடைய பிறந்தநாளைவிட இறந்த நாளும் நல்லது. விருந்து வீட்டிற்குப் போவதைவிட துக்கவீட்டிற்குப் போவது நலம்; இதிலே எல்லா மனிதர்களின் முடிவும் காணப்படும்; உயிரோடு இருக்கிறவன் இதைத் தன்னுடைய மனதிலே சிந்திப்பான். சிரிப்பைவிட துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் விருந்து வீட்டிலே இருக்கும். ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம். மூடனின் சிரிப்பு பானையின்கீழ் எரிகிற முட்களின் படபடப்பைப்போல இருக்கும்; இதுவும் மாயையே. இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; லஞ்சம் இருதயத்தைக் கெடுக்கும். ஒரு காரியத்தின் ஆரம்பத்தைவிட அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைவிட பொறுமையுள்ளவன் உத்தமன். உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே; மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும். இந்த நாட்களைவிட முன்னான நாட்கள் நலமாக இருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல. பூமியில் வசிப்பவர்களுக்கு சுதந்தரத்தோடு ஞானம் நல்லது; இதினாலே பலனுமுண்டு. ஞானம் கேடகம், செல்வமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்; இதுவே அறிவின் மேன்மை. தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேராக்கக்கூடியவன் யார்? வாழ்வுகாலத்தில் நன்மையை அனுபவித்திரு, தாழ்ந்து இருக்கும் காலத்தில் சிந்தனைசெய்; மனிதன் தனக்குப்பின்பு வருவது ஒன்றையும் கண்டுபிடிக்கமுடியாதபடி தேவன் இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் என்னுடைய மாயையின் நாட்களில் கண்டேன்; தன்னுடைய நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானும் உண்டு, தன்னுடைய பாவத்திலே நீடித்திருக்கிற பாவியும் உண்டு. மிஞ்சின நீதிமானாக இருக்காதே, உன்னை அதிக ஞானியுமாகவும் ஆக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?