எரேமியா. 1. பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் மகன் எரேமியாவினுடைய வசனங்கள்: ஆமோனுடைய மகனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருடத்தில் எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டானது. அப்புறம் யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் அரசாட்சியின் நாட்களிலும், யோசியாவின் மகனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருடத்து முடிவுவரையும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப் போகும்வரைக்கும் யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டானது. யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குவதற்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்செய்து, உன்னை தேசங்களுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். அப்பொழுது நான்: ஆ யெகோவாவாகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.