எரே. 38. இந்த நகரத்தில் தங்கியிருக்கிறவன், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பான்; கல்தேயரிடத்திற்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய உயிர் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப் போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் யெகோவா சொல்கிறார் என்றும், இந்த நகரம் பாபிலோன் ராஜாவுடைய படையின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அதைப் பிடிப்பானென்பதை யெகோவா சொல்கிறார் என்றும், எரேமியா எல்லா மக்களிடமும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் மகனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் மகனாகிய கெதலியாவும், செலேமியாவின் மகனாகிய யூகாலும், மல்கியாவின் மகனாகிய பஸ்கூரும் கேட்டார்கள். பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் யெகோவாவுடைய ஆலயத்தில் இருக்கும் மூன்றாம் வாசலில் தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான். அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னைக் கண்டிப்பாகக் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான். அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் உயிரை வாங்கத்தேடுகிற இந்த மனிதர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டாக்கிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் வாக்குக்கொடுத்தான்.