எரே. 39. யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதை முற்றுகைபோட்டார்கள். சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருடம் நான்காம் மாதம், ஒன்பதாம் தேதியில் நகரத்து மதில் உடைக்கப்பட்டது. அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், நெர்கல் சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உள்ளே நுழைந்து, நடுவாசலில் இருந்தார்கள்.