எரே. 49. அம்மோன் மக்களைக்குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ? அவனுக்குச் சந்ததி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதின் மக்கள் இவன் பட்டணங்களில் ஏன் குடியிருக்கவேண்டும்? ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது அம்மோன் மக்களின் பட்டணமாகிய ரப்பாவில் போரின் ஆர்ப்பரிப்பைக் கேட்கச்செய்வேன்; அது பாழான மண்மேடாகும்; அதை சுற்றியுள்ள ஊர்களும் நெருப்பால் சுட்டெரிக்கப்படும்; ஆனாலும் இஸ்ரவேல் தன் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டவர்களின் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும் என்று யெகோவா சொல்லுகிறார். ஏதோமைக்குறித்துச் சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தேமானில் இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ? தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள்; ஏசாவை விசாரிக்கும் காலத்தில் அவன் ஆபத்தை அவன்மேல் வரச்செய்வேன். தமஸ்குவைக்குறித்துச் சொல்வது: ஆமாத்தும் அர்பாத்தும் கலங்குகிறது; பொல்லாத செய்தியை அவர்கள் கேட்டதினால் கரைந்துபோகிறார்கள்; கடலோரங்களில் வருத்தமுண்டு; அதற்கு அமைதலில்லை. தமஸ்கு சோர்ந்துபோகும், பின்வாங்கி ஓடிப்போகும்; பயம் அதைப் பிடித்தது; பிரசவ பெண்ணைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது. சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் காப்பாற்றப்படாமல் போனதே! பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் ஆத்சோருடைய இராஜ்ஜியங்களையும் குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எழும்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசை மக்களை அழியுங்கள். அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எங்கும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள். யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ஆட்சியின் துவக்கத்தில், ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய முதன்மையான வல்லமையை முறித்துப்போட்டு, வானத்தின் நான்கு திசைகளிலுமிருந்து நான்கு காற்றுகளை ஏலாமின்மேல் வரச்செய்து, அவர்களை இந்த எல்லாத்திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள் எல்லா தேசங்களிலும் சிதறப்படுவார்கள்.