எசேக். 40. நாங்கள் பாபிலோனில் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருடத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாம் நாளாகிய அன்றே யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினான்கு வருடங்களானது. தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்திற்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது. இதோ, ஆலயத்திற்குப் வெளியே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்த மனிதன் கையிலே ஆறுமுழ நீளமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நான்கு விரற்கடை அளவு அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது. பின்பு அவர் கிழக்குமுகவாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒரு கோல் அகலமாகவும் அளந்தார். ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாக இருந்தது; அறைவீடுகளுக்கு நடுவே ஐந்து முழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாக இருந்தது. பின்பு என்னை வெளிமுற்றத்திற்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், முற்றத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது. வாசலுக்குப் பக்கத்திலும் வாசல்களின் நீளத்திற்கு எதிரிலுமுள்ள அந்தத் தளவரிசை தாழ்வான தளவரிசையாக இருந்தது. பின்பு அவர் கீழ்வாசலின் முகப்புத்துவங்கி, உள்முற்றத்துப் புறமுகப்புவரையுள்ள விசாலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறுமுழமாக இருந்தது. வெளிமுற்றத்திற்கு அடுத்த வடதிசைக்கு எதிரான வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார். அதற்கு இந்த பக்கத்தில் மூன்று அறைகளும் அந்த பக்கத்தில் மூன்று அறைகளும் இருந்தது; அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் முதல் வாசலின் அளவுக்குச் சரியாக இருந்தது; அதின் நீளம் ஐம்பது முழமும், அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது. பின்பு என்னைத் தென்திசைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே தென்திசைக்கு எதிரான வாசல் இருந்தது; அதின் தூணாதாரங்களையும் அதின் மண்டபங்களையும் அதற்குரிய அளவின்படி அளந்தார். அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது. பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உள்முற்றத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார். அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது. இருபத்தைந்து முழ நீளமும் ஐந்துமுழ அகலமுமான மண்டபங்கள் சுற்றிலும் இருந்தது. அதின் மண்டபங்கள் வெளிமுற்றத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது. அதின் அறைகளும் அதின் கதவுகளும் வாசல்களின் தூணாதாரங்களுக்கு அருகில் இருந்தது; அங்கே தகனபலிகளைக் கழுவுவார்கள். வாசலின் மண்டபத்திலே இந்தப் பக்கத்தில் இரண்டு பீடங்களும் அந்தப் பக்கத்தில் இரண்டு பீடங்களும் இருந்தது; அவைகளின்மேல் தகனபலியையும் பாவநிவாரண பலியையும் குற்றநிவாரணபலியையும் செலுத்துவார்கள். உள்முற்றத்திலே உள்வாசலுக்கு வெளியே பாடகர்களின் அறைவீடுகள் இருந்தது; அவைகளில் வடக்கு வாசலின் பக்கமாக இருந்தவைகள் தென்திசைக்கு எதிராகவும், கிழக்குவாசலின் பக்கமாக இருந்த வேறொரு வரிசை வடதிசைக்கு எதிராகவும் இருந்தது. பின்பு அவர் என்னை நோக்கி: தென்திசைக்கு எதிராக இருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது. பின்பு அவர் என்னை ஆலய மண்டபத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், மண்டபத்தின் தூணாதாரத்தை இந்தப்பக்கத்தில் ஐந்து முழமும் அந்தப்பக்கத்தில் ஐந்து முழமுமாக அளந்தார்; வாசலின் அகலம் இந்தப்புறம் மூன்று முழமும் அந்தப்பக்கம் மூன்று முழமுமாக இருந்தது. மண்டபத்தின் நீளம் இருபது முழமும், அகலம் பதினொரு முழமுமாக இருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களில் இந்தப்பக்கத்தில் ஒரு தூணும் அந்தப்பக்கத்தில் ஒரு தூணும் இருந்தது.