எசேக். 44. பின்பு அவர் என்னை கிழக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளிவாசல் வழியே திரும்பச்செய்தார்; அது பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் நுழைவதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இதற்குள் நுழைந்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும். இது அதிபதிக்கே உரியது, அதிபதி யெகோவாவுடைய சந்நிதியில் உணவு உண்பதற்காக இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, மறுபடியும் அதின் வழியாகப் புறப்படுவான் என்றார்.