தானி. 8. தானியேலாகிய எனக்கு முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்திற்குப்பின்பு, ராஜாவாகிய பெல்ஷாத்சார் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே வேறொரு தரிசனம் எனக்குக் காண்பிக்கப்பட்டது. தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கும்போது ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரண்மனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன். தானியேலாகிய நான் இந்தத் தரிசனத்தைக்கண்டு, அதின் அர்த்தத்தை அறிய முயற்சிக்கும்போது, இதோ, மனிதசாயலான ஒருவன் எனக்கு முன்னே நின்றான். அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கச்செய் என்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனித சத்தத்தையும் கேட்டேன். அப்பொழுது அவன் நான் நின்ற இடத்திற்கு வந்தான்; அவன் வரும்போது நான் அதிர்ச்சியடைந்து முகங்குப்புற விழுந்தேன்; அவன் என்னை நோக்கி: மனிதனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்திற்குரியது என்றான்.