யோவே. 3. இதோ, யூதாவிற்கும் எருசலேமிற்கும் ஏற்பட்டிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும், நான் எல்லா தேசத்தாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகச் செய்வேன், அவர்கள் என் மக்களையும் இஸ்ரவேலென்னும் என் பங்கையும் அந்நியமக்களுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினால், அவர்கள் என் மக்கள்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை விபச்சாரிகளுக்கு விலையாகக் கொடுத்து, மதுபானம் குடிப்பதற்காக பெண் குழந்தைகளைத் திராட்சைரசத்திற்கு விலையாகக் கொடுத்ததினாலும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன். அக்காலத்தில் மலைகள் திராட்சைரசத்தைப் பொழியும், மலைகள் பாலாக ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் கரைபுரண்டு ஓடும்; ஒரு ஊற்று யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும். யூதா மக்களின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையின் காரணமாக எகிப்து பாழாய்ப்போகும், ஏதோம் பாழான வனாந்திரமாகும்.