அத்தியாயம் 18
ஞானம் வாழ்வின் வழிகாட்டி 
 1 பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், 
எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். 
 2 மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், 
தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். 
 3 துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும். 
 4 மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; 
ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும். 
 5 வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, 
துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல. 
 6 மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், 
அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். 
 7 மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, 
அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி. 
 8 கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், 
ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். 
 9 தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். 
 10 யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; 
நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான். 
 11 செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; 
அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும். 
 12 அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; 
மேன்மைக்கு முன்னானது தாழ்மை. 
 13 காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, 
அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும். 
 14 மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; 
முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? 
 15 புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; 
ஞானியின் செவி அறிவை நாடும். 
 16 ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, 
பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். 
 17 தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; 
அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான். 
 18 சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, 
பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும். 
 19 பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட 
கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; 
அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும். 
 20 அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; 
அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். 
 21 மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; 
அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள். 
 22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; 
யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான். 
 23 தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; 
செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான். 
 24 நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; 
சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.